ஜெயலலிதா நினைவு நாள்: அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்

ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலத்தில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.
ஜெயலலிதா நினைவு நாள்: அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்
Published on

சேலம்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலத்தில் அக்கட்சினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற மவுன ஊர்வலம் நடந்தது. இதற்காக சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து காலை 10 மணிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் மவுன ஊர்வலம் புறப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், நடேசன், முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மவுன ஊர்வலம், பெரியார் சிலையில் இருந்து புறப்பட்டு திருவள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோவில், பழைய பஸ் நிலையம் வழியாக அண்ணா சிலையை வந்தடைந்தது.

இதையடுத்து அங்கு வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது ஜெயலலிதாவின் புகழ் ஓங்குக... என அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினார்கள். அந்தசமயத்தில், பெண்கள் சிலர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியபோது கைகளை கும்பிட்டு கதறி அழுதனர். பின்னர், அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் நினைவு நாள் ஊர்வலத்தில் மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி, கூட்டுறவு சங்க தலைவர்கள் துரைராஜ், கே.சி.செல்வராஜ், ராமராஜ், கர்ணன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பின்னர், அருகில் உள்ள சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக காலை 9 மணிக்கு, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, சேலம் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் செவ்வாய்பேட்டை அரசு விழியிழந்தோர் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பார்வையற்ற மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை வழங்கினார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சரவணன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் ஆங்காங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், சேலம் கோட்டை மைதானம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அக்கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com