சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. எதிர்ப்பு

சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படத்தை திறக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. எதிர்ப்பு
Published on

நாமக்கல்,

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபை வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்க தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். டி.டி.வி.தினகரனை பொறுத்தவரையில் தன்னுடன் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க, 18 பேரில் ஒருவரை முதல்-அமைச்சர் ஆக்குவேன் என ஆசைவார்த்தைகளை கூறி வருகிறார். அது நடக்காத காரியம் ஆகும்.

மின்வாரிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பை பொறுத்தவரையில் நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாளையும் (இன்று) பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே வேலைநிறுத்தம் அறிவித்ததற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் ஆகும். மின்வாரிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதவாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதையும் மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.

2013-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை இதுவரை வழங்கவில்லை. அதில் முறைகேடு நடந்து உள்ளது என டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டுகிறார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியையே குறை சொல்லும் இவர், எப்படி அவருக்கு விசுவாசமாக இருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறோம். எங்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்ய அவர் யார்?. டி.டி.வி. தினகரன், ஜெயலலிதா ஆட்சியை அமைப்பேன் என்று சொல்லவே தகுதி அற்றவர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com