ஜிப்மர் ஆஸ்பத்திரி தினக்கூலி ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்; நோயாளிகள் அவதி

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள்.
ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
Published on

ஜிப்மர் ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மத்திய அரசு நிர்ணயித்த குறைந்த ஊதியத்தை வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகையை அவரவர் கணக்கில் செலுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஜிப்மர் தினக்கூலி ஊழியர்கள் நிர்வாக அலுவலகம் முன்பு ஒட்டுமொத்தமாக நேற்று காலை 7 மணி அளவில் திரண்டனர். அவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்தவுடன் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், இனியன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகள் ஜிப்மர் இயக்குனருடன் பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், போராட்டக்குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஊழியர்களின் கோரிக்கையை 15 நாட்களுக்குள் நிறைவேற்று வதாக தெரிவித்தார். அதன் பேரில் 3 மணி நேரம் நடந்த போராட்டத்தை ஊழியர்கள் கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். இதன் காரணமாக உள்புற, வெளிப்புற நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com