அயோத்தி வழக்கில் தீர்ப்பு- மாவோயிஸ்டுகள் நடமாட்டம் - கோவையில் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு கூறப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து டி.ஜி.பி. திரிபாதிகோவையில்போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு- மாவோயிஸ்டுகள் நடமாட்டம் - கோவையில் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை
Published on

கோவை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நேற்று கோவை வந்தார். அவர், கோவை அவினாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, கோவை நகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்துவது குறித்து டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை வழங்கினார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினி, பென்டிரைவ் மற்றும் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் அவர்கள் ஏ.கே. 47 துப்பாக்கியுடன் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

குண்டு காயங்களுடன் மாவோயிஸ்டு தலைவர் தீபக் தப்பி விட்டார். தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கேரள போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து டி.ஜி.பி. ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. சுனில்குமார், சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எப்.) போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக- கேரள எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு நடத்தும்படியும், வனப்பகுதிக்குள் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதையொட்டி கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர். அதை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com