ஜங்ஷன் ரெயில்வே மேம்பால பணிக்கு ராணுவ இடம் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு

திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பால பணிக்கு ராணுவ இடம் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. பாதுகாப்பு துறை விதித்த புதிய நிபந்தனையால் மேலும் தாமதம் ஆகிறது.
ஜங்ஷன் ரெயில்வே மேம்பால பணிக்கு ராணுவ இடம் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு
Published on

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்தின் முதல் கட்ட பணிகள் மன்னார்புரம் பகுதி தவிர மதுரை சாலை, திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதிகளில் முடிவடைந்து உள்ளது. இதனையொட்டி மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் இந்த பாலத்தில் தற்போது வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளன. ஆனால் ராணுவத்திற்கு சொந்தமான 66 சென்ட் நிலம் நெடுஞ்சாலை துறையிடம் இதுவரை ஒப்படைக்கப்படாததால் மன்னார்புரம் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையாமல் அந்தரத்தில் தொங்கிய படி உள்ளது. எனவே பாலத்தின் மேல் பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு உள்ளது.

ராணுவத்திற்கு சொந்தமான 66 சென்ட் நிலத்தை வழங்குவதற்கு பாதுகாப்பு துறை நிர்வாக அனுமதி வழங்கிவிட்டது. மேலும் திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 350 ஏக்கர் நிலத்திற்கும் ஒப்புதல் கிடைத்து விட்டது. இந்த இரு இடங்களுக்கு பதிலாக காஞ்சீபுரத்தில் சுமார் 600 ஏக்கர் நிலம் வழங்க தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு செய்தது. இந்த இடத்தை பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அதனை பெற்றுக்கொள்வதற்கும் சம்மதம் தெரிவித்தனர். இது தொடர்பான பரிவர்த்தனைகள் டெல்லியில் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் காஞ்சீபுரத்தில் வழங்கும் நிலத்துடன் சேர்த்து சென்னை மாநகரிலும் சுமார் 3 ஏக்கர் நிலம் தரவேண்டும் என புதிதாக ஒரு நிபந்தனை விதித்து இருப்பதால் இது தொடர்பான பேச்சுவார்த்தை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்து வருகிறது. இதன் காரணமாக மேம்பால பணிக்கு தேவையான ராணுவ இடம் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதன் மூலம் கட்டுமான பணியை முடிப்பதிலும் மேலும் காலதாமதம் ஏற்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com