இளநீர் விற்பனை முடங்கியது: கண்ணீர் வடிக்கும் தென்னை விவசாயிகள்

ஊரடங்கு உத்தரவால் இளநீர் விற்பனை முடங்கியதால், தென்னை விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இளநீர் விற்பனை முடங்கியது: கண்ணீர் வடிக்கும் தென்னை விவசாயிகள்
Published on

தேனி,

தேனி மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழைக்கு இணையாக தென்னை சாகுபடி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து தேங்காய் மற்றும் இளநீர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் நேரில் வந்து இளநீர் வாங்கி செல்வார்கள். மேலும் கோடைகாலம் என்றால் இளநீர் தேவை அதிகம் இருக்கும். சாலையோரங்களிலும் ஏராளமான இளநீர் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே வருகின்றனர். இதனால் இளநீர் விற்பனையில் இடிவந்து தாக்கியது போல் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கில் இளநீர் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகளால் ஒரு நாளைக்கு 10 இளநீர் விற்பனை செய்வது கூட சிரமமாகி விட்டது.

விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள் இளநீர் கொள்முதல் செய்ய வருவது இல்லை. இதனால், தேனி மாவட்டத்தில் இளநீருக்காக சாகுபடி செய்யப்பட்ட தென்னை மரங்களில் வெட்டப்படாமல் இளநீர் குலைகள் தொங்குகின்றன. அவை பருவம் தவறியதால், வீணாகி வருகின்றன.

தோப்பு பராமரிப்புக்கு செலவு செய்த தொகையை கூட திருப்பி எடுக்க முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து, கண்ணீர் வடித்து வருகின்றனர். இதேபோன்று சாலையோர இளநீர் கடைகளும் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படுகின்றன. இதனால், பகல் நேரத்தில் வெறிச்சோடிய சாலையில் ஏக்கத்துடன் இளநீர் வியாபாரிகள் காத்திருந்து போதிய அளவில் விற்பனையாகாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

எனவே, காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இளநீர் வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com