காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு பொதுமக்கள் ஏமாற்றம்

ஆடி மாதம் அம்மனுக்கு படையல் செய்வதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்கள் விலை உயர்ந்து இருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு பொதுமக்கள் ஏமாற்றம்
Published on

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று மீன்கள் வரத்து அதிகளவில் இருந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கூழ் ஊற்றி, இரவில் அம்மனுக்கு மட்டன், மீன் படையல் வைத்து வழிபடுவார்கள்.

ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அம்மனுக்கு படையல் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் மற்றும் மீன்பிரியர்கள் மீன்கள் வாங்குவதற்காக காசிமேடு மீன்பிடிதுறைமுகத்தில் குவிந்தனர். இதனால் மீன்வரத்து அதிகம் இருந்தபோதிலும் மீன்களின் விலையும் உயர்ந்தே இருந்தது.

குறிப்பாக 1 கிலோ வஞ்சிரம்-ரூ.1,000, ஷீலா-ரூ.650, வவ்வால்-ரூ.500, சங்கரா-ரூ.300-க்கும், இதுதவிர சின்னவகை மீன்கள் 1 கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதனால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் மீன்பிரியர்கள் விலையை கேட்டு ஏமாற்றத்துடன் மீன்களை வேடிக்கை பார்த்தபடி திரும்பிச் சென்றனர். பலர் விலை அதிகம் என்பதால் பெரிய வகை மீன்களை வாங்காமல் சிறய வகை மீன்களையே வாங்கிச் சென்றனர்.

கடம்பா, எறா, கவளை மீன்கள் மற்றும் நண்டு உள்ளிட்டவைகள் விலை சற்று குறைவாக இருந்ததால் அதையே பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதனால் விலை அதிகம் உள்ள பெரிய வகை மீன்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

தற்போது காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்பனைக்காக தனி இடம் கட்டப்பட்டு பரந்து விரிந்து இருப்பதால், மீன்பிரியர்கள் எந்தவித தள்ளுமுள்ளும் இன்றி மீன்களை வாங்கிச்சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com