காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு - போலீசார் தீவிர விசாரணை

காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு - போலீசார் தீவிர விசாரணை
Published on

பணகுடி,

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணற்றில் இஸ்ரோ மையம் அமைந்துள்ளது. இதன் அருகில் தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் மலர் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் புதர் மண்டி கிடக்கின்றது.

இந்த நிலையில் நேற்று மாலையில் இந்த மலர் வணிக வளாகத்தில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு, அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் இஸ்ரோ மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி பணகுடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாமே சிங் மீனா, பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், 2 நாட்டு வெடிகுண்டுகள் மலர் வணிக வளாக காம்பவுண்டு சுவரில் வெடித்து சிதறியதற்கான அடையாளம் கிடைத்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறைகள் காணப்பட்டது. இதனால் நாட்டு வெடிகுண்டு வீசியவர்களுக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

மேலும் இதுதொடர்பாக பக்கத்து வீடுகளில் உள்ள பெண்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, பயங்கர சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துபோது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வேகமாக சென்றதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர் ஆனந்தி வந்து தடயங்களை சேகரித்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து பணகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மிகவும் பாதுகாப்பு மிகுந்த இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com