

களக்காடு,
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளியல் நடத்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளியல் நடத்தி வந்தனர். தற்போது பள்ளி விடுமுறையையொட்டி தினமும் ஏராளமானோர் வந்து சென்றனர். இதற்கிடையே கடும் வெப்பத்தால் களக்காடு மலையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தலையணையில் தண்ணீர் வற்றியது. அங்குள்ள மரங்களும் வெயிலால் பட்டு போய் காணப்படுகிறது.
வறட்சியின் காரணமாக தண்ணீர் வற்றியதால் வனவிலங்குகள் ஊருக்குள் வரும் நிலை எழுந்துள்ளது. மூங்கிலடியில் கடந்த 13ம் தேதி முதல் சிறுத்தைப்புலி நடமாட்டமும், கள்ளியாறு பகுதியில் கரடிகள் நடமாட்டமும் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று தலையணை மூடப்பட்டது. தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.