

கழுகுமலை,
கழுகுமலை நகர பஞ்சாயத்தில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு சீவலப்பேரி குடிநீர் சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கழுகுமலையில் பெரும்பாலான இடங்களில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.
எனவே சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் கழுகுமலை நகர பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நகர செயலாளர்கள் கிருஷ்ணகுமார் (தி.மு.க.), முருகன் (ம.தி.மு.க.), சிவராமன் (இந்திய கம்யூனிஸ்டு) உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முற்றுகையிட்டவர்களிடம், கோவில்பட்டி குடிநீர் வடிகால்வாரிய உதவி பொறியாளர் மெர்சி, கழுகுமலை நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் உஷா, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீரானது கயத்தாறு ராஜாபுதுக்குடி, நாலாட்டின்புத்தூர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளின் வழியாக கழுகுமலைக்கு கொண்டு வரப்படுகிறது.
தற்போது ராஜாபுதுக்குடியில் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இன்று (வியாழக்கிழமை) முதல் கழுகுமலையில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.