கல்வராயன்மலை நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்

கல்வராயன் மலை நீர் வீழ்ச்சிகளில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
கல்வராயன்மலை நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
Published on

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன் மலை உள்ளது. சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன் மலை உள்ளது. இங்கு பெரியார், சிறுகலூர், மேகம், கவியம் மற்றும் எட்டியார் ஆகிய 5 நீர் வீழ்ச்சிகள் உள்ளன. இதில் பெரியார் நீர் வீழ்ச்சிதான் பெரிய நீர் வீழ்ச்சியாகும்.

மேலும் வெள்ளிமலை கரியாலூர் சாலையில் படகு சவாரி செய்வதற்காக படகு குழாமும் உள்ளது. இதனால் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழவும், படகு சவாரி செய்வதற்கும் கடலூர், சேலம், புதுச்சேரி, திருச்சி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பெய்து வரும் மழையால் கல்வராயன் மலை நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் தற்போது இங்கு சுற்றுலா பயணிகள் வரத்து காணப்படுகிறது.

தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். நீர் வீழ்ச்சிகளில் கொட்டும் தண்ணீரில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்வதை காண முடிகிறது. மேலும் அங்குள்ள கரியாலூர் சாலையில் உள்ள படகு குழாமில் சிறுவர்கள், பெரியவர்கள் படகு சவாரி செய்வதையும் பார்க்க முடிகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் கல்வராயன்மலை களைகட்ட தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் நீர்வீழ்ச்சிகளில் சென்று குளித்து மகிழ்வதற்கு போதிய சாலை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு குளித்து மகிழலாம் என ஆர்வத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். ஆனால் பெரிய நீர் வீழ்ச்சியான பெரியார் நீர் வீழ்ச்சியில் போதிய வசதிகள் இருப்பதால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

ஆனால் அனைத்து நீர் வீழ்ச்சிகளுக்கும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து மன்னார்குடி பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கூறும்போது கல்வராயன் மலையில் பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் குளித்து மகிழவும், படகு குழாமில் படகு சவாரி செய்வதற்காகவும் கல்வராயன் மலைப்பகுதிக்கு வந்தோம். ஆனால் இங்கு பெரியார் நீர் வீழ்ச்சியை தவிர மற்ற நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. எனவே அனைத்து நீர் வீழ்ச்சிகளுக்கும் சென்று வர பாதை வசதி, நீர்வீழ்ச்சிகளில் பயமின்றி குளிப்பதற்கும் போதிய வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தர வேண்டும். இதற்கு கல்வராயன் மலைப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் அப்போதுதான் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com