

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது21). இவருடைய நண்பரை 3 மோட்டார்சைக்கிளில், 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் வெட்டுவதற்காக, சென்றனர். அப்போது அந்த வழியாக சாலையில் நடந்து வந்த ராஜி என்பவரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். மீண்டும் அந்த கும்பல் காஞ்சீபுரம் சங்கரமடம் வழியாக, பல்லவர் மேடு வந்தனர். அங்கு ஒரு வீட்டின் கண்ணாடியை கல்லால் நொறுக்கினர். பிறகு காஞ்சீபுரம் மடம் தெரு வழியாக அந்த ரவுடி கும்பல் வந்த போது, சாலையில் நடந்து சென்ற ஒருவரை திடீரென மடக்கி, கத்தியால் அவரது முகத்தில் வெட்டினர்.
காஞ்சீபுரத்தின் மைய பகுதியான காந்திரோடு வழியாக அந்த ரவுடி கும்பல் மோட்டார்சைக்கிளில் கத்தியை கையில் தூக்கியவாறு சத்தம் போட்டு கொண்டு சென்றனர். பின்னர் காஞ்சீபுரம் பொய்யாகுளத்தில் வசித்து வந்த பிரபல ரவுடி தியாகு வீட்டை தாக்க முயன்றனர். வீட்டில் யாரும் இல்லாததால், தியாகு வீட்டின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார், 2 மோட்டார்சைக்கிள்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர். பின்னர் அந்த ரவுடி கும்பல் அந்த வழியாக சென்ற வடமாநில கூலித்தொழிலாளி ஒருவரை மடக்கி திடீரென தலையில் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு சென்றனர்.
தணிகா கோஷ்டியை சேர்ந்த அந்த ரவுடி கும்பல் பார்த்திபன், சரவணன், அலாட் அருள், வசந்த், தினகரன், வெங்கடேசன், வசா ஆகியோர் கத்திமுனையில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்கள் மப்பேடு அருகே ரவுடி தினேஷின் ஆதரவாளர்களை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் காஞ்சீபுரத்தில் அரங்கேறி வருகிறது.
இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே தணிகாவின் நண்பர்களான காஞ்சீபுரம் மளிகைசெட்டித்தெரு பெருமாள் நாயக்கன் தெருவை சேர்ந்த ரவுடி சரவணன் போலீசுக்கு பயந்து கொக்குமருந்து சாப்பிட்டு, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீதர் இடத்தை பிடிப்பது அவரது டிரைவர் தினேஷா? அவரது உறவினர் தணிகாவா? என்ற போட்டி நிலவி வருகிறது. அதையொட்டி, காஞ்சீபுரத்தில் ரவுடி ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷ், ஸ்ரீதரின் உறவினர் தணிகா, பிரபல ரவுடி பொய்யாக்குளம் தியாகு, உள்பட ஏராளமான ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது.
ரவுடிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.