

சென்னை,
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம், பையனூரில் திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழா கடந்த 26.8.2018 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அவர்களது கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, ஜெயலலிதா பெயரில் அம்மா படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 16.9.2019 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.