

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, தினந்தோறும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து மலை மீதுள்ள பெருமாளையும், அங்குள்ள தங்க பல்லி, வெள்ளி பல்லியையும், பெருந்தேவி தாயாரையும், சக்கரத்தாழ்வாரையும் தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலின் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய விழாவான கருடசேவை திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை 4 மணியளவில் கோவிலில் இருந்து வரதராஜபெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.
பிறகு கோவிலில் இருந்து பெருமாள் உற்சவரை தூக்கி வரும் போது, தோள்பட்டையில் வைத்து தூக்கும் மரத்துண்டு விரிசல் இருப்பதை பார்த்த பக்தர்கள் உடனடியாக கோவில் நிர்வாக அறங்காவலர் விஜயனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த விரிசல் அடைந்த மரத்துண்டு அகற்றப்பட்டு ஏற்கனவே கோவிலில் இருந்த மரத்துண்டு பொருத்தப்பட்டது. இதனால் மணி நேரம் தாமதமாக பெருமாள் உற்சவர் கருடவாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டார்.
அதிகாலை 5 மணிக்கு கோபுர வாயிலில் வந்த போது வானத்தில் கருடன் சுற்றி சுற்றி வந்தது பக்தர்களை நெகிழ செய்தது.
பின்னர் சாமி கருடவாகனத்தில் டி.கே.நம்பி தெரு, விளக்கடிகோவில் தெரு, ஆலடி பிள்ளையார் கோவில் தெரு, கரிக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு வழியாக நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பிள்ளையார்பாளையம் பகுதிக்கு சென்றது. வழிநெடுக்கிலும் பக்தர்கள் வழிபட்டனர். பிறகு பிள்ளையார் பாளையம் பகுதியில் இருந்து புத்தேரி தெரு வழியாக கச்சபேஸ்வரர் கோவில் அருகே சென்றது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பெருமாளை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கங்கைகொண்டான் மண்டபம் என்ற இடம் வந்த போது சங்கரமடத்தில் இருந்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் சங்கரமடத்தில் இருந்து வெளியே வந்து பெருமாளை பயபக்தியுடன் தரிசித்தார். பின்னர், கங்கைகொண்டான் மண்டபத்தில் இருந்து செங்கழுநீரோடை வீதி வழியாக, பூக்கடை சத்திரம், நான்கு ராஜ வீதிகள் வழியாக மூங்கில் மண்டபம் வந்தடைந்தது. மூங்கில் மண்டபத்தில் இருந்து காந்திரோடு வழியாக பெருமாள் கருட வாகனத்தில், கோவிலை சென்றடைந்தார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து பெருமாளை பயபக்தியுடன் சாமிதரிசனம் செய்தனர்.
வரதராஜபெருமாள் கோவில் கருடசேவையை முன்னிட்டு அன்னதானம், மோர், பழரசம் வழங்கப்பட்டது. கருடசேவை விழாவையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், ஏராளமான போலீசார், ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழாவில் அறநிலையத்துறை அதிகாரிகள், தியாகராஜன், வை.முருகேசன், ஆ.குமரன், மா.வெள்ளைச்சாமி, செந்தில்குமார், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.