கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம்: ‘அ.தி.மு.க.வில் இளைஞர்களின் உழைப்புக்கு ஏற்ற பதவி தேடி வரும்’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

அ.தி.மு.க.வில் இளைஞர்களின் உழைப்புக்கு ஏற்ற பதவி தேடி வரும் என்று கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய பாசறை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம்: ‘அ.தி.மு.க.வில் இளைஞர்களின் உழைப்புக்கு ஏற்ற பதவி தேடி வரும்’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
Published on

விழுப்புரம்,

கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் கோண்டூர் கூட்டு ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வானூர் சக்கரபாணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அ.தி.மு.க. வழிகாட்டு குழு உறுப்பினரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு கட்சியில் புதியதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பில் உருவாக்கப்பட்டதாகும். கடந்த 2008-ம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உருவாக்கப்பட்டது. அப்போது கிராமம், கிராமமாக சென்று அதிக அளவில் இளைஞர்களை சேர்த்ததன் எதிரொலியாக 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதேபோல் கடந்த 1998-ம் ஆண்டு ஜெயலலிதா பேரவை உருவாக்கப்பட்டது. அப்போதும் பேரவையில் ஏராளமான இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். அதன் எதிரொலியாக 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அந்த சமயத்தில் மாவட்ட பேரவை செயலாளராக இருந்த என்னை 2001-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக்கியதோடு மட்டுமின்றி அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா.

ஆதலால் இங்கு வந்துள்ள இளைஞர்களின் உழைப்பு என்றும் வீண் போகாது. அ.தி.மு.க.வில் இளைஞர்களின் உழைப்புக்கு ஏற்றவாறு பதவி நிச்சயம் தேடி வரும். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் எந்த பதவிக்கும் வரமுடியும். அதற்கு எடுத்துக்காட்டு நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர் மீது மக்களுக்கு நல்ல எண்ணம், நம்பிக்கை உள்ளது.

இளைஞர்களாகிய நீங்கள் பொதுமக்களிடையே நமது ஆட்சியில் செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரியுங்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் நமக்கு தோல்வியே கிடையாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுபோல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து மலர வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வேண்டும். இதுவே நமது லட்சியமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஷெரிப், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பாசறை செயலாளர் முருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சேதுபதி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரவிக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மிட்டா மண்டகப்பட்டு முருகன், அற்பிசம்பாளையம் குமரேசன், கோண்டூர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com