

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆன்மிக சொற்பொழிவு, சப்பர பவனி, வாகன பவனி போன்றவை நடந்து வந்தன.
9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆறாட்டு நிகழ்ச்சி
10-ம் திருவிழாவான நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், களபம், சந்தனம், குங்குமம், தயிர் போன்ற பொருட்களால் அஷ்டாபிஷேகம் நடந்தது.
காலை 9 மணிக்கு அம்மன் ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனை மேளதாளம் முழங்க சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி வழியாக கிழக்கு வாசல் கடற்கரையில் உள்ள ஆறாட்டு மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன், விட்டல், ராதாகிருஷ்ணன், பத்மநாபன், கீழ் சாந்திகள் ஸ்ரீதர், சீனிவாசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பூஜைகள் நடத்தினர். உற்சவ அம்பாளையும், ஸ்ரீ விக்ரகத்தையும் முக்கடல் சங்கமத்துக்கு எடுத்து சென்று ஆறாட்டு நடத்தினர்.
கிழக்கு வாசல் திறப்பு
பின்னர் வருடத்தில் 5 முக்கிய தினங்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், கோவில் மேலாளர் சிவராமசந்திரன், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் தலைவர் சொக்கலிங்கம், நிர்வாகி இளங்கோ உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.