அரசு ஊழியர்கள், விவசாயிகளை கவரும் வகையில் கர்நாடக பட்ஜெட்டில் புதிய சலுகைகள்?

சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள், விவசாயிகளை கவரும் வகையில் கர்நாடக பட்ஜெட்டில் புதிய சலுகைகள், திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.
அரசு ஊழியர்கள், விவசாயிகளை கவரும் வகையில் கர்நாடக பட்ஜெட்டில் புதிய சலுகைகள்?
Published on

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சிகளாக பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. காங்கிரஸ் சார்பில் வீடு, வீடா சென்று அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் முதல்-மந்திரி சித்தராமையா புதிய கர்நாடகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்தார். அதேப் போல் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, மாற்றத்திற்கான பயணத்தையும், ஜனதாதளம் (எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி வளர்ச்சிக்கான பயணத்தையும் தொடங்கியுள்ளனர். மேலும் பா.ஜனதா அடுத்த கட்டமாக மாவட்டந்தோறும் பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது எனலாம். தற்போது புதியதாக உருவான நடிகர் உபேந்திரா கட்சி, முன்னாள் போலீஸ் துணை சூப்பிரண்டு அனுபமா செனாய் கட்சி உள்ளிட்ட புதிய கட்சிகளும் இந்த தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க தென்இந்தியாவில் செல்வாக்கு இல்லாத பா.ஜனதா, கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க தீயாக வேலை செய்து வருகிறது. அதேப் போல் மற்ற மாநிலங்களில் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காய்களை நகர்த்தி வருகிறது.

இதற்கிடையே கர்நாடக சட்டசபை கூட்டம் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 16-ந்தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்-மந்திரி சித்தராமையா ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது என பா.ஜனதா எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறது.

இதை பொருட்படுத்தாமல் பட்ஜெட் தயாரிப்பு பணியில் சித்தராமையா தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களை திருப்திபடுத்தும் வகையில், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு 35 சதவீத ஊதிய உயர்வு, அவர்களது ஓய்வு வயதை 62 ஆக அதிகரித்தல், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதேப் போல் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிடவும் சித்தராமையா திட்டமிட்டு உள்ளார். அதாவது விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. அத்துடன் விவசாயத்தை காக்கும் வகையில் புதியதாக வேளாண்மை திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என தெரிகிறது.

மேலும் தலித் மக்கள், சிறுபான்மையினர் மட்டுமின்றி அனைத்து மக்களையும் கவரும் வகையில் கர்நாடக பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com