விவசாய கடன் தள்ளுபடி பற்றி புதிய அறிவிப்பு கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் 8-ந்தேதி தாக்கல் முதல்-மந்திரி குமாரசாமி தகவல்

2019-20-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் (பிப்ரவரி) தாக்கல் செய்யப்படும் எனவும், அதில் விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் எனவும் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி பற்றி புதிய அறிவிப்பு கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் 8-ந்தேதி தாக்கல் முதல்-மந்திரி குமாரசாமி தகவல்
Published on

பெங்களூரு,

இதுகுறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி குமாரசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விவசாய கடன் தள்ளுபடி செய்ய கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விவசாய கடனை 4 கட்டமாக தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டது. அந்த திட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி ஒரே கட்டத்தில் விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய கூட்டணி அரசு முடிவு எடுத்துள்ளது.

அடுத்த மாதம்(பிப்ரவரி) 8-ம் தேதி 2019-20-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறேன். இந்த பட்ஜெட்டில் விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வது பற்றி அறிவிக்க உள்ளேன். இதற்காக பட்ஜெட்டில் ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

விவசாய கடன் தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் கூட்டணி அரசை பா.ஜனதா தலைவர்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதா அரசு மறுத்து வருகிறது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடனுக்காக தான், அந்த வங்கிகள் கடனை செலுத்தும்படி கூறி விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல பா.ஜனதாவினர் நாடகமாடுகின்றனர். விவசாயிகள் மீது பா.ஜனதாவுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பா.ஜனதாவுக்கு விருப்பம் இல்லை.

ஆனால் எனது தலைமையிலான கூட்டணி அரசு விவசாய கடனை ஒரே கட்டத்தில் தள்ளுபடி செய்ய முழு முயற்சி எடுத்து வருகிறது. பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியிட்டு, அதனை உறுதிப்படுத்த தயாராக உள்ளேன். விவசாயிகள் பிரச்சினைகளை தீர்ப்பதே எனது முதல் நோக்கம். அதனால் விவசாய கடன் தள்ளுபடி செய்யும் முடிவில் இருந்து கூட்டணி அரசு ஒரு போதும் பின் வாங்காது. விவசாயிகளுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com