கர்நாடகத்திற்கு தனி கொடி தேவை இல்லையா? மந்திரி சி.டி.ரவிக்கு, சித்தராமையா கண்டனம்

கர்நாடகத்திற்கு தனி கொடி தேவை இல்லை என்று கூறிய மந்திரி சி.டி.ரவிக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்திற்கு தனி கொடி தேவை இல்லையா? மந்திரி சி.டி.ரவிக்கு, சித்தராமையா கண்டனம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்திற்கு என்று தனி கொடி தேவை இல்லை என்றும், அதை கர்நாடக அரசு அனுமதிக்காது என்றும் கன்னட கலாசாரத்துறை மந்திரி சி.டி.ரவி நேற்று முன்தினம் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்திற்கு என்று தனி கொடி உருவாக்குவதை மாநில அரசு எதிர்ப்பது சரியல்ல. மாநிலங்கள் தனி கொடியை வைத்துக்கொள்ள அரசியலமைப்பு சட்டத்தில் எந்த தடையும் விதிக்கவில்லை. தனி கொடியை எதிர்ப்பது, கன்னட விரோத மனப்பான்மையை இந்த அரசு வெளிப்படுத்துகிறது.

நாம் நமக்கென்று உருவாக்கிய கன்னட தாய் வாழ்த்து பாடலை ஒப்புக்கொள்ளவில்லையா?. இதனால் தேசிய கீதத்திற்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக கருதப்பட்டதா?. தேசிய கொடிக்கு கீழ் மற்ற கொடிகளை ஏற்ற வேண்டும் என்று விதிமுறை சொல்கிறது. இதை பின்பற்றுவது நமது கடமை அல்லவா?.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது கன்னட கொடியை எதிர்ப்பது ஏன்?. மூத்த எழுத்தாளர்கள், கன்னட கொடியை உருவாக்க கோரி மனு கொடுத்தனர். அதன்படி சில திருத்தங்களுடன் புதிய கொடியை உருவாக்கி, அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால் இப்போது கர்நாடக கொடி வேண்டாம் என்று கூறி மாநில அரசே எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது. தனி கொடி தேவை இல்லை என்று மந்திரி சி.டி.ரவி கூறியிருப்பது, கன்னடர்களின் உணர்வுகளை கிளறி பார்ப்பதாக உள்ளது. அதை சரிசெய்ய வேண்டிய வேலைகளை விட்டுவிட்டு, மந்திரி தேவையின்றி பிரச்சினைகளை உருவாக்குகிறார். மந்திரி சி.டி.ரவி, தனது முடிவை வாபஸ் பெற்று, கர்நாடகத்திற்கு தனி கொடியை ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com