கர்நாடக மக்கள் மோடியை மன்னிக்கவே கூடாது மீராகுமார் பேட்டி

கர்நாடகத்திற்கு மத்திய அரசு அநீதி இழைப்பதால் கர்நாடக மக்கள் மோடியை மன்னிக்கவே கூடாது என்று முன்னாள் சபாநாயகர் மீராகுமார் கூறினார்.
கர்நாடக மக்கள் மோடியை மன்னிக்கவே கூடாது மீராகுமார் பேட்டி
Published on

பெங்களூரு,

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு இருப்பதால், நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. இதன் காரணமாக 15-வது நிதி குழுவில் கிடைக்கும் நிதியில் கர்நாடகத்திற்கு ரூ.22 ஆயிரம் கோடி குறையும். மத்திய அரசின் திட்டங்கள் கர்நாடகத்தில் திட்டமிட்டே தாமதப் படுத்தப்படுகின்றன.

கர்நாடகத்தில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் கஷ்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கடந்த ஆண்டு கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவியது. வறட்சி நிவாரண பணிகளுக்கு ரூ.3,311 கோடி நிதி உதவியை கர்நாடக அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.795 கோடி மட்டுமே ஒதுக்கியது. தலித், பழங்குடியின மக்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு குறைத்துவிட்டது.

பா.ஜனதா ஆளும் மாநிலங்களான குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களில் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. ஆனால் கர்நாடகத்தில் இந்த சம்பவங்களின் எண்ணிக்கை மிக குறைவு ஆகும். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் தீண்டாமை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

தலித் மற்றும் பழங்குடியின மக்களை பாதுகாக்கும் சட்டத்தின் வீரியத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தை பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் அமல்படுத்த முடிவு செய்துவிட்டன. போலீஸ் அதிகாரிகள் அதை மறுத்தாலும், அவர்களை மாநில அரசுகள் மிரட்டுகின்றன. ஆண்டுக்கு 21 லட்சம் பெண் குழந்தைகள் மாயமாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு வெறும் ரூ.230 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதன்படி பார்த்தால் ஒரு மாவட்டத்திற்கு ரூ.43.75 லட்சம் மட்டுமே கிடைக்கும். நிர்பயா நிதி திட்டத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய பா.ஜனதா அரசு இதுவரை ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கியது. இதில் இதுவரை ரூ.825 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்குவதில் மோடி அரசு திட்டமிட்டே கர்நாடக அரசை புறக்கணிக்கிறது.

பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்த மருத்துவமனையை கர்நாடகத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?. கர்நாடகத்தில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எதிர்க்கட்சியை விமர்சிக்கும் முன்பு மோடி கண்ணாடி முன்பு நின்று தனது முகத்தை பார்க்க வேண்டும். கர்நாடகத்திற்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது. அதனால் கர்நாடக மக்கள் மோடியை மன்னிக்கவே கூடாது.

இவ்வாறு மீராகுமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com