கர்நாடக மேல்-சபை துணைத் தலைவர் தர்மேகவுடா தற்கொலைக்கான காரணம் என்ன? கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

கர்நாடக மேல்-சபை துணைத் தலைவர் தர்மேகவுடா தற்கொலைக்கான காரணம் குறித்து கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
கர்நாடக மேல்-சபை துணைத் தலைவர் தர்மேகவுடா தற்கொலைக்கான காரணம் என்ன? கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
Published on

பெங்களூரு,

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயப்பட்டணாவை சேர்ந்தவர் தர்மேகவுடா (வயது 65). ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த இவர் கர்நாடக மேல்-சபை துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அதிகாலை கடூர் தாலுகா குணசாகரா அருகே மங்கனஹள்ளி கிராமத்தில் தர்மேகவுடா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கடூர் போலீசாரும், அரிசிகெரே ரெயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இருப்பினும் அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தில் பல மனவேதனைகள் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 15-ந்தேதி கர்நாடக மேல்-சபை தலைவர் பிரதாப் சந்திர ஷெட்டி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதம் நடந்தது. அப்போது மேல்-சபை தலைவர் இருக்கையில் தர்மேகவுடா அமர சென்றார். அந்த சமயத்தில் காங்கிரசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் அவர் மனவேதனை அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதே வேளையில் தர்மேகவுடா கூட்டுறவு வங்கி தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனாலும் அவர் விரக்தியில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் புதியதாக வீடு கட்டி வந்துள்ளார். இதனால் அவர் கடன் தொல்லையில் சிக்கி இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இதுதவிர மனைவியுடன் அவருக்கு குடும்பத்தகராறு இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தர்மேகவுடா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார் என்பதை அறிய முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

இதற்கிடையே தர்மேகவுடா தற்கொலை குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளார். சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகியும் தர்மேகவுடாவின் தற்கொலைக்கான காரணத்தை போலீசாரால் அறிய முடியவில்லை. இதனால் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும், தர்மேகவுடாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இன்னும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் தர்மேகவுடாவின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மேல்-சபை துணைத் தலைவர் தற்கொலை விவகாரத்தில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. இருப்பினும் கர்நாடக அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இந்த வழக்கு தொடர்பாக தினமும் அறிக்கை வழங்கி வருகிறோம். இந்த வழக்கில் உண்மையை கண்டறியும்படி எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் வரத்தான் செய்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்த வழக்கை கையாள முடியாது.

இருப்பினும் நாங்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளோம். விரைவில் மேல்-சபை துணைத் தலைவர் தற்கொலை விவகாரத்தில் குற்றப்பத்திரிகை அறிக்கை தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக மேல்-சபை துணைத் தலைவராக இருந்த தர்மேகவுடா தற்கொலை வழக்கில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் போலீசார் கண்டறிய முடியாமல் திணறி வருவது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com