கருணாநிதி மறைவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் மவுன ஊர்வலம்

கருணாநிதி மறைவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் மவுன ஊர்வலம் நடந்தது.
கருணாநிதி மறைவையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் மவுன ஊர்வலம்
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மறைவையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று மவுன ஊர்வலம் நடைபெற்றது. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமையில் நடைபெற்ற இந்த மவுன ஊர்வலத்துக்கு அ.தி.மு.க. தவிர அனைத்து கட்சி நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

மெழுகுவர்த்தி ஏந்தியவாறு கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் புறப்பட்ட இந்த அமைதி ஊர்வலம், பஜார் வழியாக ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் குமனன்சாவடியில் இருந்து காட்டுப்பாக்கம் வரை மவுண்ட் பூந்தமல்லி சாலையில் தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 500- க்கும் மேற்பட்டோர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்தை வைத்துக்கொண்டு கொட்டும் மழையில் ஊர்வலமாக நடந்து வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதே போல் பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் கரையான்சாவடியில் இருந்து பூந்தமல்லி பஸ் நிலையம் வரை 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக நடந்து சென்று மறைந்த கருணாநிதி உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மீஞ்சூர் நகர தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னால் அமைச்சர் சுந்தரம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ், அவைத்தலைவர் தன்சிங் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தொடங்கிய அமைதி ஊர்வலம் மீஞ்சூரில் உள்ள தி.மு.க. அலுவலகத்தை அடைந்தது. அங்கு கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் நகர தி.மு.க. மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இதற்கு திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி மவுன ஊர்வத்தை தொடங்கி வைத்தார். இதில் திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், நகர துணை செயலாளர்கள் மனோகரன், ஏகாம்பரம், மாவட்ட அவைத்தலைவர் தேவன், மாவட்ட பிரதிநிதிகள் குப்பன், ரமேஷ்பாபு, சங்கர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ராசகுமார், காங்கிரஸ், பா.ஜ.க., ம.தி.மு.க., முஸ்லிம் லீக் என பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த ஊர்வலமானது முக்கிய சாலை வழியாக காமராஜர் சிலை அருகே முடிவடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com