கரூரில் 104 டிகிரி வெயில், வெப்ப காற்றினை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி

கரூரில் 104 டிகிரி வெயில் வாட்டி வதைத்ததால், வெப்ப காற்றினை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கரூரில் 104 டிகிரி வெயில், வெப்ப காற்றினை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
Published on

கரூர்,

தமிழகத்தின் மைய பகுதியாக கரூர் உள்ளது. கந்தக பூமியான கரூரில் வெயில், பனி, மழை உள்ளிட்டவற்றின் தாக்கம் எப்போதுமே சற்று கூடுதலாக இருக்கும். அந்த வகையில் இந்தாண்டு வெயில் காலத்தின் தொடக்கத்திலேயே அதிகபட்சமாக தினமும் 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வேலை நிமித்தமாக வெளியில் செல்வோர், போக்குவரத்தினை மேற்கொள்பவர்கள், தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அந்த வகையில் நேற்று அதிகபட்சமாக 104.3 டிகிரி வரை வெயில் கரூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் வெப்ப காற்றினை சமாளிக்க முடியாமல் வாகன ஓட்டிகள், மக்கள் அவதியுற்றனர். இன்னும் வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதால் குடிநீர் பிரச்சினை உள்ளிட்டவற்றை தீர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில், ஆஸ்பத்திரி உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் எப்போதும் கிடைக்கம் வகையில் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

கரூரின் குடிநீர் ஆதாரமாக அமராவதி ஆறு விளங்குகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து இல்லை. மாறாக அகண்ட அமராவதி ஆறு வறண்டு போய் மணற்பாங்காக காட்சியளிக்கிறது. இதனால் ஆற்றையொட்டியுள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. கரூர் நகரில் சில இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கி வருவதை பரவலாக பார்க்க முடிகிறது. எனினும் அமராவதி ஆற்றில் நீர் இல்லாத சூழலில் கரூர் லைட்அவுஸ் கார்னர் உள்ளிட்ட இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு ஆறு தூய்மையாக காட்சியளிப்பது சற்று ஆறுதல் தரும் விதமாக இருக்கிறது. இதே போல் ஆற்றின் பல்வேறு இடங்களிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com