கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளரை மாற்றக்கோரி புகார் செய்துள்ளோம் துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளரை மாற்றக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளோம் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளரை மாற்றக்கோரி புகார் செய்துள்ளோம் துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி
Published on

கிருஷ்ணகிரி,

நாடாளுமன்ற துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான தம்பிதுரை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அவரது சொந்த ஊரான சிந்தகம்பள்ளியில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை நேற்று பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம், புதுச்சேரி உள்பட 39 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற போவது உறுதி. அதனால் தான் இந்த விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கூட இளைஞர்கள் ஆர்வமாக ஓட்டு போட வந்தனர். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கரூரில் சில பிரச்சினைகள் நடந்து வருகின்றன.

எங்கள் கட்சியில் இருந்தவர் வேறு இயக்கத்திற்கு சென்று இப்போது மாற்று கட்சிக்கு சென்று மாவட்ட செயலாளர் ஆகி உள்ளார். அவர் தலைமையை ஈர்ப்பதற்காக சில செயல்களை செய்து வருகிறார். அதற்கு ஏற்றாற் போல தேர்தல் பார்வையாளர் ஒருவர் வந்துள்ளார். அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் முழுக்க, முழுக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் மீது நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். அந்த பார்வையாளரை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

பொதுவாக எந்த சட்டம் - ஒழுங்கும் கரூரில் ஏற்படவில்லை. அங்கு அமைதியாக தேர்தல் நடந்தது. மக்கள் அ.தி.மு.க. பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. அரசின் திட்டங்களை மக்கள் மறக்கவில்லை. அதனால் மக்கள் ஆர்வமாக வாக்களிக்க வருகிறார்கள். கூட்டணி கட்சியினரும் எங்களுடன் இணைந்து நல்ல முறையில் பணியாற்றுகிறார்கள். மத்திய அரசு எங்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்டிருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து கொடுத்தனர்.

மேகதாது அணை கூடாது என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம். உச்ச நீதிமன்றத்தில் மேகதாது அணையை கட்ட மாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. கரூர் தொகுதியில் அ.தி.மு.க. செயலாளர் வீட்டில் கூட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். சோதனை என்பது பொதுவானது. எங்களுக்கு மடியில் கணம் இல்லை. அதனால் எங்களுக்கு பயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com