கஜகஸ்தான் நாட்டில் கோர விபத்து பஸ் தீப்பிடித்து எரிந்தது; 52 பேர் கருகிச்சாவு

கஜகஸ்தான் நாட்டில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 52 பயணிகள் கருகி பலியாகினர்.
கஜகஸ்தான் நாட்டில் கோர விபத்து பஸ் தீப்பிடித்து எரிந்தது; 52 பேர் கருகிச்சாவு
Published on

அல்மாட்டி,

ரஷியாவின் வோல்கா நதிக்கரை நகரமான சமராவில் இருந்து, கஜகஸ்தான் நாட்டின் சைம்கென்ட் நகரத்துக்கு நேற்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்தப் பஸ்சில் 55 பயணிகள், டிரைவர், கண்டக்டர் என 57 பேர் பயணம் செய்தனர்.

கஜகஸ்தான் நாட்டின் அக்டோபே என்ற நகரத்துக்கு அருகே உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு அந்தப் பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. பயணிகள் அலறினர். மரண ஓலமிட்டனர். ஆனால் தீயோ அதிவேகமாக பஸ் முழுவதும் பரவியது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் பஸ் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இந்த கோர விபத்தில் 52 பயணிகள் கருகி பலியாகினர். 5 பேர் மட்டும் படுகாயங்களுடன் தப்பினர்.

பஸ்சில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து எந்த தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இந்த தகவல்களை கஜகஸ்தான் நாட்டின் அவசரகால பணிகள் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பலியானவர்கள் அண்டை நாடான உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்து நடந்த பகுதியில் 2015-ம் ஆண்டு, ஏப்ரல் 20-ந் தேதி ஒரு மினி பஸ்சும், வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com