விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விதித்து உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் கலெக்டர் அறிவிப்பு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், பல்வேறு இந்து அமைப்பினர் பொது இடங்களிலும் சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இதற்காக திருவள்ளூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு, அவற்றுக்கு வர்ணம் தீட்டும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல், சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுஅமைதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி, விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த விரும்பும் நபர்கள், அமைப்பாளர்கள் முன்கூட்டியே போலீஸ் உதவி கமிஷனர்கள், துணை கலெக்டர், வருவாய் கோட்ட அலுவலரிடம் உரிய படிவத்தை பூர்த்தி செய்து அனுமதி பெற்று வழிபாடு நடத்தவேண்டும்.

இவ்வாறு அனுமதிபெற மனு செய்யும்போது விநாயகர் சிலை வைக்கஉள்ள தனியார் நிலத்தின் உரிமையாளர்கள், அரசு நிலமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையிடமும் (உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை அல்லது சம்பந்தப்பட்டதுறை), போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையிடம் இருந்தும், மேலும் மின் இணைப்பு எவ்வாறு பெறப்படுகிறது என்பதற்கான கடிதம் மற்றும் தற்காலிக மின்இணைப்பு தொடர்பாக மின்வாரியத்திடம் இருந்தும் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும்.

இந்த தடையில்லா சான்றுகளுடன் மேற்படி அலுவலர்களிடம் மனு செய்யும்போது, அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு உரிய அனுமதி வழங்கப்படும்.

விநாயகர் சிலைகள் பச்சை களிமண்ணால்(சுடப்படாதது) செய்யப்பட்டதும், எவ்வித ரசாயன கலவையற்றதுமாக இருத்தல்வேண்டும். நீரில் கரையும் தன்மையுடய மற்றும் தீங்கு விளைவிக்காத, இயற்கை வர்ணங்களை உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும்.

ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது. சிலை தயாரிப்பாளர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர்ஆப்பாரிஸ் கொண்டு விநாயகர் சிலைகளை செய்யக்கூடாது.

விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடத்தில் அமைக்கப்படும் தற்காலிக கூடங்கள் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும், அந்த இடத்தின் அருகில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களும் இருக்கக்கூடாது. வழிபடும் இடத்தின் உள்ளே, வெளியே சென்றுவர தனித்தனியே வழிகள் ஏற்படுத்தப்படவேண்டும். வழிபாட்டு இடத்தில் தேவையான மருத்துவ வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்படுத்தி கொள்ளவேண்டும்.

வழிபாட்டுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் 10 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. காலை, மாலை இருவேளைகளிலும்(பூஜை நடைபெறும் சமயம் மட்டும்) 2 மணி நேரத்துக்கு மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்க இயலும். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.

சட்டவிரோதமான செயல்கள் நடைபெறாமல் இருப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கண்காணிக்க வேண்டும். அனுமதியற்ற மின்இணைப்பு எடுக்கக்கூடாது. வழிபாட்டுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் இதர மதவழிபாட்டுதலம் மற்றும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே அமைக்கக்கூடாது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 32 தன்னார்வலர்களை 24 மணிநேரமும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் சிலைகள் பாதுகாப்புக்காக இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். எந்த ஒரு அரசியல் பிரமுகர் மற்றும் மத தலைவர்கள் குறித்த விளம்பர பதாகைகள் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடத்தில் இருக்கக்கூடாது.

விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் எந்த காரணத்தை கொண்டும் மற்ற மதத்தை பாதிக்கும் வகையிலான முழக்கங்கள் கூடாது. வருவாய்த்துறை, போலீஸ் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய துறைகளால் வழங்கப்படும் அனைத்து நிபந்தனைகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாக பின்பற்றவேண்டும்.

அனுமதி பெறப்பட்டு பொதுஇடத்தில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள், நிறுவப்பட்ட 5 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் கரைக்கப்படவேண்டும். விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட தினத்தில் அனுமதிக்கப்பட்ட தடத்தின் வழியாக முன்னதாக புறப்படுதல் வேண்டும்.

விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்ல மினிலாரி, டிராக்டர் போன்ற 4 சக்கர வாகனங்களை பயன்படுத்தவேண்டும். மாட்டு வண்டி, மீன்பாடி வண்டி, 3 சக்கர வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அந்த வாகனத்தில் இருக்கவேண்டும். விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடம், ஊர்வலம் மற்றும் கரைக்கும் இடத்தில் வெடிக்கும் வெடிபொருட்களை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com