கீரனூர் பஸ் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் கீரனூர் பஸ் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கீரமங்கலம் பகுதியில் மின்கம்பம் மற்றும் மரங்கள் சாய்ந்தன.
கீரனூர் பஸ் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது
Published on

கீரனூர்,

புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான தற்காலிக பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மாவட்ட விளையாட்டு மைதானம், பால்பண்ணை ரவுண்டானா, திலகர் திடல் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதேபோல் திருவரங்குளம், அரிமளம், கே.புதுப்பட்டி, காரையூர், கீரனூர், கீரமங்கலம், வடகாடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதில் கீரனூர் பஸ் நிலையத்தில் இலுப்பூர் பகுதிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பயங்கர சத்தத்துடன் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் நேற்று கீரனூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மழை காரணமாக கீரமங்கலம் அருகே உள்ள செரியலூரில் ஒரு மின்கம்பம் சாய்ந்தது. அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டி ருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் மின்கம்பம் சாய்ந்ததால் செரியலூர் இனாம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையின் காரணமாக கீரமங்கலம், வடகாடு பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. அப்பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com