கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் வக்கீல்களுடன் சென்று திடீர் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணையில் வக்கீல்களுடன் சென்று கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தது தொடர்பாக தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அறிக்கை அளித்துள்ளனர்.
கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் வக்கீல்களுடன் சென்று திடீர் ஆய்வு
Published on

தேனி:

முல்லைப்பெரியாறு அணை

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணையில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அணையின் பாதுகாப்பு பணியில் மட்டும் கேரள போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கேரள நீர்வளத்துறை மந்திரி ரோசி அகஸ்டின் கேரள சட்டசபையில் பேசும்போது, "முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்திற்கென தனி செயற்பொறியாளர் உள்ளார். முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து, நீர்வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை தமிழகத்திடம் இருந்து பெறவேண்டிய நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு என கேரள அரசு சார்பில் தனி செயற்பொறியாளர் நியமிக்கவேண்டும்" என்றார்.

கேரள அதிகாரிகள் ஆய்வு

கேரள நீர்வளத்துறை மந்திரி சட்டசபையில் பேசியதை தொடர்ந்து, கடந்த 12-ந்தேதி கேரள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பிரதான அணை, அணையின் மதகு, பேபி அணை ஆகிய இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். அவருடன் கட்டப்பனை செயற்பொறியாளர் ஹரிக்குமார் உள்பட அதிகாரிகள் சிலரும், 2 வக்கீல்களும் சென்றுள்ளனர்.

அணையில் கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் நியமிப்பது தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கேரள நீர்வளத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவிக்கப்படவில்லை.

அரசுக்கு அறிக்கை

இதற்கிடையே தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அணையில் வக்கீல்களுடன் சென்று கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அணையில் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கேரள அதிகாரிகள் எதற்காக ஆய்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் ஆய்வில் 2 வக்கீல்கள் இடம் பெற்றனர். அவர்கள் அரசு வக்கீல்கள் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com