மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை - கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை - கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

கடலூர்,

விருத்தாசலம் அருகே உள்ள பெரியகோட்டிமுளையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் விஜயேந்திரன் (வயது 18). அதே ஊரைச்சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சத்தியமூர்த்தி(26). உறவினர்களான இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

விஜயேந்திரன் விருத்தாசலம் பகுதியைச்சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். அடிக்கடி தனது காதலியுடன் செல்போனில் பேசுவார். சில சமயங்களில் தனது உறவினரான சத்தியமூர்த்தியின் செல்போனை வாங்கி, அதன் மூலமும் காதலியுடன் பேசினார். விஜயேந்திரனின் காதலி மீது சத்தியமூர்த்தியும் ஆசைப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சத்தியமூர்த்தி, தனது செல்போனில் இருந்து விஜயேந்திரனின் காதலியை தொடர்பு கொண்டு, உன்னால் விஜயேந்திரன் பூச்சிமருந்து குடித்து விட்டான். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவனை உடனே பார்க்க வா என்று கூறினார். அதன்பேரில் மாணவி திருப்பூருக்கு வந்தார். சத்தியமூர்த்தி, அவளிடம், விஜயேந்திரன் உனக்கு தகுதியானவன் இல்லை எனக்கூறி அவளை தனது அறைக்கு அழைத்துச்சென்று கற்பழித்தார். இச்சம்பவம் கடந்த 11-3-2017-ந்தேதி நடந்தது.

இதன்பிறகு அவளை ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். இதற்கிடையே மாணவி காணாமல் போனதாக அவளது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் சத்தியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து மாணவியை மீட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மாணவியை கடத்திய குற்றத்துக்காக சத்தியமூர்த்திக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், மாணவியை கற்பழித்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறைதண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உள்ளார். குற்றவாளியான சத்தியமூர்த்தி சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com