

லாரி மோதியது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, கஸ்பா கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி கலாவதி (வயது 39). இவர்களுக்கு சாய் பிரசாந்த் (12) என்ற மகன் உள்ளார். இவர்கள் 3 பேரும் ஒரு மொபட்டில் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் இருந்து பாலுசெட்டிசத்திரத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுக்காக சென்றுகொண்டிருந்தனர்.
காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை அருகே இவர்கள் செல்லும்போது சென்னையில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த ஒரு லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மொபட் மீது மோதியது.
சாவு
இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய கலாவதி கணவர், மகன் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். கணவர் ரங்கநாதன், மகன் சாய் பிரசாந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுந்தரராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.