வீட்டின் முன் நின்றவர் கொலை: “உறவினரை கத்தியால் குத்தியதால் தொழிலாளியை வெட்டிக்கொன்றோம்” கைதான அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதான அண்ணன்-தம்பி உள்பட 3 பேர், உறவினரை கத்தியால் குத்தியதால் அவரை வெட்டிக்கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வீட்டின் முன் நின்றவர் கொலை: “உறவினரை கத்தியால் குத்தியதால் தொழிலாளியை வெட்டிக்கொன்றோம்” கைதான அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

ஸ்ரீவைகுண்டம்,

நெல்லை அருகே செய்துங்கநல்லூரை அடுத்த கீழ நாட்டார்குளம் இசக்கியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா. இவருடைய மகன் குரு (வயது 35), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி உஷா (33). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவில் குரு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் திடீரென்று அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே குரு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த பயங்கர கொலை குறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த முத்தையாவின் மகன்கள் துரை (27), மாசிலாமணி (25), இவர்களது உறவினரான மேல நாட்டார்குளத்தைச் சேர்ந்த குருநாதனின் மகன் செல்லத்துரை (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான துரை உள்பட 3 பேர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக, எங்களுடைய குடும்பத்தினருக்கும், குருவின் மனைவி உஷாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 11-6-2018 அன்று உஷாவை அவதூறாக பேசியதாக கூறி, எங்களுடைய உறவினரான செல்லத்துரையை குரு கத்தியால் குத்தினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்த வழக்கு செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, நாங்கள் பழிக்குப்பழியாக குருவை கொல்ல திட்டமிட்டோம். இதனை அறிந்த அவர், தன்னுடைய குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை அருகே நொச்சிக்குளத்தில் வாடகை வீட்டில் குடியேறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர், குடும்பத்தினருடன் மீண்டும் தனது வீட்டில் குடியேறினார். இதனால் எங்களுக்குஅவர் மீது மீண்டும் ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவருடைய மனைவியை நாங்கள் அடிக்கடி முறைத்து பார்த்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, அவர் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் எங்களிடம் விசாரித்து எச்சரித்தனர்.

இது எங்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நான், எனது தம்பி மாசிலாமணி, செல்லத்துரை ஆகிய 3 பேரும் சேர்ந்து குருவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றோம். பின்னர் காட்டு பகுதியில் பதுங்கி இருந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 3 பேரையும் போலீசார் நேற்று ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com