புதுவையில் லாரி டிரைவர் படுகொலை; சடலத்தை கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்ற மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

புதுவையில் லாரி டிரைவரை படுகொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுவையில் லாரி டிரைவர் படுகொலை; சடலத்தை கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்ற மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி ரோட்டில் தாசில்தார் அலுவலகமும் உள்ளது. இங்கு காவலாளியாக உள்ள நாகராஜ் நேற்று காலை 6 மணியளவில் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அவர் அந்த கழிவுநீர் வாய்க்காலில் பெரிய சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதை கண்டார். அந்த மூட்டையை பார்த்தவுடன் அவருக்கு சந்தேகம் வந்தது. உடனே அவர் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இது பற்றிய தகவல் அறிந்தவுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா, போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாபுஜி, சப்இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரசாமி, தமிழரசன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த சாக்கு மூட்டையை போலீசார் வெளியே கொண்டு வந்து பிரித்து பார்த்தனர். அப்போது அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் கொலை செய்யப்பட்டு பிணமாக இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிணமாக கிடந்தது பெரியார்நகர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(வயது 35) லாரி டிரைவர் என்பது தெரியவந்தது. இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது உடலை அவரது மாமனார் அடையாளம் காட்டினார். இதனை தொடர்ந்து நேற்று புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவருடைய தலை, கழுத்து, முகம் உள்பட உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது கால் முறிக்கப்பட்ட இருந்தது. கொலையாளிகள் அவரை கொலை செய்து சாக்குமூட்டையில் உடலை கட்டும் போது காலை முறித்து உள்ளே வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? வேறு ஏதாவது காரணமாக என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com