

கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் சஞ்சய்(வயது14). இவர் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(17). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். தியாகராஜன் மகன் வெங்கடேசன்(18). இவர் பாபநாசம் அருகே உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.
குமார் மகன் விஷ்ணுவர்தன்(13) கபிஸ்தலம் அருகே உள்ள வடகுரங்காடு துறையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பாலகிருஷ்ணன் மகன் சிவபாலன்(15) கபிஸ்தலத்தில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கருப்பையன் மகன் நவீன்(14) கபிஸ்தலத்தில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். சாமிநாதன் மகன் கதிரவன்(17) கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் சஞ்சய், மணிகண்டன், வெங்கடேசன், விஷ்ணுவர்தன், சிவபாலன், நவீன், கதிரவன் ஆகிய 7 பேரும் கபிஸ்தலம் காவிரி ஆற்றங்கரையில் முனியாண்டவர் கோவில் அருகே உள்ள ஒரு படித்துறையில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 7 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் சஞ்சய் மட்டும் தத்தளித்தப்படி கரையேறினார். மற்ற 6 பேரும் ஆற்றில் மூழ்கி மாயமாகி விட்டனர். சஞ்சய் கரைக்கு வந்து பார்த்தபோது தன்னுடன் குளித்த நண்பர்களை காணாததால் அதிர்ச்சி அடைந்து ஊருக்கு சென்று உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் கிராம மக்கள் காவிரி ஆற்றில் இறங்கி மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பாபநாசம் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் மாணவர்களை தீவிரமாக தேடினர். அப்போது ஆற்றில் மூழ்கி மணிகண்டன், வெங்கடேசன், விஷ்ணுவர்தன், நவீன் ஆகிய 4 பேர் பலியானது தெரிய வந்தது.
நாணல் புற்களுக்கு இடையே சிக்கி இருந்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஆற்றில் மூழ்கி மாயமான சிவபாலன், கதிரவன் ஆகியோரை தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.
நேற்று காலை வரை தேடும் பணி நீடித்தது. சிவபாலன், கதிரவன் ஆகியோரது உடல்களும் நேற்று மீட்கப்பட்டது. ஆற்றில் பள்ளமான பகுதியில் சிக்கியிருந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியான சம்பவம் கபிஸ்தலம் பகுதி பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
பலியான மாணவர்களின் உடலுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கபிஸ்தலம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி 6 மாணவர்கள் பலியாகி உள்ளனர். எனவே இப்பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவிக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க அரசு தவறிவிட்டது என்று இந்த நேரத்தில் நான் குற்றம் சாட்டுகிறேன். மணல் கொள்ளையை அரசு தடுத்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் என்றார். அப்போது மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ், வட்டார தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ராம்குமார், தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி ஆகியோரும் மாணவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.