அமைச்சரின் எதிர்ப்பை மீறி ஆய்வுக்கு சென்ற கிரண்பெடிக்கு ஏனாம் மக்கள் கருப்புக்கொடி; வழிநெடுகிலும் நின்றதால் பரபரப்பு

அமைச்சரின் எதிர்ப்பை மீறி ஏனாம் பிராந்தியத்தில் ஆய்வுக்கு சென்ற கவர்னர் கிரண்பெடிக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சரின் எதிர்ப்பை மீறி ஆய்வுக்கு சென்ற கிரண்பெடிக்கு ஏனாம் மக்கள் கருப்புக்கொடி; வழிநெடுகிலும் நின்றதால் பரபரப்பு
Published on

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான ஏனாம் ஆந்திர மாநில பகுதிக்குள் உள்ளது. இந்த பிராந்தியத்தில் கவர்னர் கிரண்பெடி கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பிராந்திய மக்கள் சில கோரிக்கைகளை வைத்தனர்.

அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஏனாமில் 2 நாட்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட கவர்னர் கிரண்பெடி திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மக்களுக்கு இலவச அரிசி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு கவர்னர் வரட்டும் நானே வரவேற்பு அளிக்கிறேன். இல்லாவிட்டால் ஏனாம் மக்கள் கவர்னர் கிரண்பெடிக்கு பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் புதுவை மாநிலத்துக்கு சொந்தமான தீவு ஒன்றை மணல் கடத்தல் கும்பலுக்கு தாரை வார்க்க கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வின்போது பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற சூழல் நிலவியது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக புதுவை போலீசாருடன் இணைந்து ஆந்திர மாநில போலீசார் ஏனாமுக்கு வரவழைக்கப்பட்டனர். போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி கவர்னர் கிரண்பெடி புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு ஏனாம் சென்றார். நேற்று காலை அவர் ஆய்வுப் பணியை தொடங்கினார். கோதாவரி ஆற்றிலிருந்து குருசாம்பேட்டாவில் மணல் எடுக்கும் இடம், கனகலாபேட்டாவில் உள்ள குப்பை கொட்டும் இடம், வெங்கடேஸ்வரா கோவில், அரசு ஆஸ்பத்திரி, 5-ம் நம்பர் தீவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார்.

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏனாமில் பெரும்பாலான வீடுகளில் கருப்புக்கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவும் கருப்பு சட்டை அணிந்து தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார்.

சாலைகளில் இளைஞர்கள் கருப்பு பலூன்களுடன் இருசக்கர வாகனங்களில் வலம் வந்தனர். கவர்னர் செல்லும் வழியெங்கிலும் ஆண்கள், பெண்கள் கவர்னரே திரும்பி போ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் கருப்புக் கொடி ஏந்தி நின்றிருந்தனர். சிலர் வாயில் கருப்பு துணி கட்டி இருந்தனர். சாவித்திரி நகரில் பள்ளி மாணவ, மாணவிகளும் கருப்புக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி நின்றனர்.

கவர்னர் வெங்கடேஸ்வரா கோவிலுக்கு செல்லும்போது அவரை வாழ்த்தி பாரதீய ஜனதா கட்சியினர் கோஷம் எழுப்பினர். அப்போது அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவின் ஆதரவாளர்கள் மல்லாடிகிருஷ்ணாராவுக்கு ஆதரவாக கோஷங்களை முழங்கினார்கள். இதையொட்டி கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இருந்தபோதிலும் மக்கள் யாரும் கவர்னரின் வாகனத்தை வழிமறிக்கவில்லை. தங்கள் எதிர்ப்புகளை அமைதியான முறையில் காட்டினர்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் எதிர்ப்பையும் மீறி ஆய்வுக்குச் சென்ற கவர்னருக்கு வழிநெடுகிலும் நின்று பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அங்கு அரசு அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் பங்கேற்ற புள்ளியியல் துறை ஊழியர் முடிக்கி அப்பாராவ் (வயது 55) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. எனவே அவர் கூட்டத்தில் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏனாம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரிவித்தனர். இது குறித்து ஏனாம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com