உரிமையாளரை கத்தியால் குத்தி நகை பட்டறையில் கொள்ளையடித்த 4 பேருக்கு 7 ஆண்டு சிறை

நகை பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்தி கொள்ளையடித்த, முன்னாள் ஊழியர் உள்பட 4 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
உரிமையாளரை கத்தியால் குத்தி நகை பட்டறையில் கொள்ளையடித்த 4 பேருக்கு 7 ஆண்டு சிறை
Published on

கோவை,

கோவை செட்டிவீதி, அசோக்நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 59). இவர் நகைபட்டறை உரிமையாளர். இவரது நகை பட்டறையில், மதுரை மாவட்டம், துறையூர் தச்சான்பட்டியை சேர்ந்த ரமேஷ் (37) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். சரியாக வேலைக்கு வராததால் ரமேசை, உரிமையாளர் சிவக்குமார் வேலையில் இருந்து நிறுத்திவிட்டார். இதனால் ரமேஷ் ஆத்திரம் அடைந்தார்.

கடந்த 26.8.2009 அன்று சிவக்குமார் நகை பட்டறையில் இருந்தபோது, ரமேஷ் கூட்டாளிகளை அனுப்பி கொள்ளையடிக்க திட்டம் வகுத்து கொடுத்தார். சிவக்குமாரை கத்தியால் குத்தி, நகைபட்டறையில் இருந்த 62 கிராம் தங்க நகையை கொள்ளையடித்துச்சென்றனர்.

செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, ரமேசுக்கு இந்த கொள்ளையில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான பழனி பாலசமுத்திரத்தை சேர்ந்த சேகர்(32), ஆறுமுகம்(31), ஆனந்தகுமார் (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகரன், குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் கொள்ளையடித்த குற்றத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், கத்தியால் குத்தியதற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அத்துமீறி நுழைந்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க உத்தரவிட்டார். ஏககாலத்தில் இந்த தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டு இருப்பதால் இவர்கள் 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவிப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com