

ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம், பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். தமிழகத்தின் உயரமான மலைசிகரமாக விளங்கி வரும் தொட்டபெட்டா காட்சி முனைக்கு சென்று சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை கண்டு ரசித்து விட்டு செல்கின்றனர்.
தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரி தேயிலை சாகுபடியை அறிந்து கொள்ளும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி-கோத்தகிரி சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில் தேயிலை பூங்கா அமைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்த பூங்காவில் தோட்டக்கலைத்துறை தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிறிய அளவிலான தேயிலை தொழிற்சாலை அமைக்க முடிவு செய்தது. ஆனால், அங்கு சிறிய அளவி லான தேயிலை தொழிற்சாலை தொடங்க அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதால், தற்போது இயற்கையான தேயிலை பூங்காவாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
தேயிலை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட விளையாட்டு உபகரணங்கள், மன அமைதியை தரும் இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள், குன்றுகள், வாகனங்களை நிறுத்த போதுமான இடம், தேயிலை செடிகளை பார்ப்பதற்கு நடைபாதை போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அவசிய தேவைகளான சிற்றுண்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் தேயிலை எப்படி உற்பத்தி செய்வது? என்பது குறித்த தகவல்கள் அங்கு இடம்பெற வில்லை. இதனால் தற்போது பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.
கூடலூர் பகுதியில் தேயிலை விவசாயி ஒருவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் ரசாயனம் இல்லாமல் இயற்கை உரத்தின் மூலம் பச்சை தேயிலை சாகுபடி செய்கிறார். அவர் மினி கிரீன் டீ தேயிலை தொழிற்சாலை அமைத்து, சுத்தமான தேயிலைத்தூளை இந்தியா முழுவதும் ஆர்டர் பெற்று விற்பனை செய்து வருகிறார்.
மேலும் வெளிநாடுகளுக்கும் நீலகிரி தேயிலைத்தூளை ஏற்றுமதி செய்கிறார். இதுபோன்ற தேயிலை விவசாயியை அணுகி தேயிலை பூங்காவில் அரசு மற்றும் தனியார் ஒன்றிணைந்து தேயிலைத்தூள் உற்பத்தி செய்து சுற்றுலா பயணிகளுக்கு பூங்காவில் விற்பனை செய்வதுடன், வெளியிடங்களுக்கும் விற்பனை செய்யலாம். அப்போது தான் தனியார் தேயிலை தொழிற்சாலையை கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகளை இங்கு வரவழைக்க முடியும்.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் தேயிலை வாரியத்துடன் இணைந்து தேயிலை பூங்காவை மிக சிறந்த தேயிலை காட்சி பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மாற்றினால் தோட்டக்கலைத்துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சீசன் காலங்களில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தேயிலை பூங்காவுக்கு தனியாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்.
மேலும் நீலகிரி சுற்றுலா தலங்கள் குறித்த வரைபடங்களில் தேயிலை பூங்காவை இடம்பெற செய்ய வேண்டும். தேயிலை பூங்காவில் சிறிய அளவிலான தேயிலை தொழிற்சாலை அமைத்தால், தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஆர்வத்துடன் வருகை தருவார்கள்.