கொடைக்கானலில் களை கட்டும் குளு குளு சீசன், மலர்கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானலில் மலர்க் கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகிறது. இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கொடைக்கானலில் களை கட்டும் குளு குளு சீசன், மலர்கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா
Published on

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருவர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் 2-வது வாரம் வரை கொடைக்கானலில் சீசன் களை கட்டும்.

சீசனையொட்டி கொடைக் கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு மலர்கண்காட்சி, கோடை விழாவுடன் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த பூங்கா, 15 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மலர்கண்காட்சிக்காக இந்த பூங்கா ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. அங்கு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூத்துக் குலுங்குகின்றன.

டெய்சி, டெல்பீனியம், கிளாடியஸ், பிளாக்ஸ், சால்வியா, பெல்கோனியம், பால்சம், செலோசியா, கேலெண்டுல்லா, ஆஸ்டர், அஸ்டமேரியா, டேலியா, மேரிகோல்டு, பேன்சி, ஆந்தூரியம், ஆண்ட்ரீனியம் உள்ளிட்ட பல்வேறு மலர்ச்செடிகள், பல வண்ணங்களில் பூத்துக்குலுங்குவது காண்போரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை மலர்களை கண்டு மயங்காதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பூங்காவில் பூக்கள் பூத்துக்குலுங்கியுள்ளது,

இதுமட்டுமின்றி அனைத்து தரப்பினரும் விரும்பும் ரோஜா மலர்களும் சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்துகிறது. இதனை காண சுற்றுலாபயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பூக்களின் முன்பாக குடும்பத்துடன் நின்று செல்பி எடுத்தும் சுற்றுலாபயணிகள் மகிழ்கின்றனர்.

இந்தநிலையில் 30-ந்தேதி மலர்கண்காட்சி மற்றும் கோடை விழாவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளனர். இதற்கான மேடை அமைக்கும் பணிகளும், கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பழங்கள், காய் கறிகள், மலர்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட சிறப்பு அரங்குகள் அமைக் கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com