கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில், ஒரு கோடி முறை ஸ்ரீராம ஜெயம் எழுதிய முஸ்லிம் முதியவர் - பாராட்டுகள் குவிகிறது

கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு முதியவர் ஒரு கோடி முறை ஸ்ரீராம ஜெயத்தை எழுதியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில், ஒரு கோடி முறை ஸ்ரீராம ஜெயம் எழுதிய முஸ்லிம் முதியவர் - பாராட்டுகள் குவிகிறது
Published on

பெங்களூரு,

இந்து மக்கள் அனைவரும் கடவுள் ராமனை வழிபடுவது வழக்கம். ராமனுக்கு கோவில் கட்டுவதற்காகத்தான் அயோத்தியில் இந்துக்கள் போராடி தற்போது வெற்றி கண்டுள்ளனர். இந்த நிலையில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் ராம பக்தராக இருப்பது வியக்கத்தக்க விஷயமாக உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு.

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா மாகோந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பாட்சா சாப்(வயது 97). இவர் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். மகாத்மா காந்தி, நேரு, இந்திராகாந்தி, கே.சி.ரெட்டி, கிருஷ்ணப்பா உள்ளிட்ட தலைவர்கள் மீது அதிக பற்றுக்கொண்ட இவர் சுதந்திர போராட்டங்களிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பத்ராஞ்சலில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இவரை சந்தித்த ஒரு சாது, நீ ஒரு கோடி முறை ஸ்ரீராமா ஜெயம் என்று எழுதினால் வாழ்வில் நன்றாக இருப்பாய் என்று கூறியுள்ளார். அவர் சொன்ன வாக்கை மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொண்ட பாட்சா சாப், அன்று முதல் தனது வீட்டில் உள்ள பாத்திரங்கள், புத்தகங்கள், ஆல மரத்தின் இலைகள், வேர்கள், இரும்பு தகடுகள் இப்படி ஏராளமானவற்றில் ஸ்ரீராம ஜெயம் என்று எழுதி வந்தார்.

இவ்வாறாக தற்போது அவர் ஒரு கோடி முறை ஸ்ரீராம ஜெயம் என்று எழுதி முடித்துள்ளார். தற்போது அவற்றை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கொண்டு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மாகோந்தி கிராமத்தில் ஒரு ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.

இதற்கிடையே முஸ்லிம் மதத்தை சேர்ந்த பாடா சாப், ராமர் பக்தராக இருப்பது குறித்து ஏராளமான ஊடகங்கள், பத்திரிகைகள், சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. அந்த செய்திகளை பார்த்த பலரும் மத நல்லிணத்துக்கு பாட்சா சாப் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதாக கூறி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com