கொள்ளிடம் அணையில் கூடுதலாக பாறாங்கற்கள் கொட்டி தடுப்புகள் அமைப்பு

தண்ணீர் அதிகமாக வந்தால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கொம்பு கொள்ளிடம் அணையில் கூடுதலாக பாறாங்கற்கள் கொட்டி தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கொள்ளிடம் அணையில் கூடுதலாக பாறாங்கற்கள் கொட்டி தடுப்புகள் அமைப்பு
Published on

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி நடந்தது. இதில் மணல் மூட்டைகள், பாறாங்கற்கள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தும் பணி மும்முரமாக நடந்தது.

மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்லும் இடத்தில் பாறாங்கற்கள் கொண்டு அடைக்கப்பட்டது. இந்த பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள பாறாங்கற்களின் இடைப்பட்ட பகுதி வழியாக தண்ணீர் கசிந்து கொண்டு செல்கிறது. இதனை தடுப்பதற்காக அணையின் மேற்கு பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டும், கரும்பு சக்கைகள், வாழை சருகுகள் கொண்டும் அடைக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் கொள்ளிடம் அணைக்கு தண்ணீர் அதிகமாக வந்தால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது பாறாங்கற்கள் மூலம் தடுப்பு ஏற்படுத்திய இடத்தில் கூடுதலாக பாறாங்கற்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இதற்காக நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களில் இருந்து பாறாங்கற்கள் லாரிகளில் கூடுதலாக கொண்டு வரப்படுகின்றன. தண்ணீரில் மணல் மூட்டைகளை அடுக்குவதற்காக சவுக்கு கம்புகள், இரும்பு கம்பிகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றின் உயரத்துக்கு பாறாங்கற்கள் கொட்டப்பட உள்ளதாகவும், அதேநேரத்தில் மணல் மூட்டைகளும் அந்த உயரத்திற்கு அடுக்கி தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும், இந்த பணிகள் முடிவடைய மேலும் சில நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கொம்பு கொள்ளிடம் அணையில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி ஆற்றில் வினாடிக்கு 1,300 கன அடி நீரும், காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,300 கன அடி நீரும் வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com