கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ; கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களை கலெக்டர்கள் சண்முகசுந்தரம், திவ்யதர்‌ஷினி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ; கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்
Published on

அணைக்கட்டு,

தமிழ்நாடு முழுவதும் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான முகாம் நேற்று தொடங்கியது. 21 நாட்கள் இந்த முகாம் நடத்தப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் 6 லட்சம் கால்நடைகள் உள்ளன.

வேலூர் மாவட்டத்திலும் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அணைக்கட்டு தாலுகாவில் உள்ள வேலங்காடு கிராமத்தில் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தார்.

முகாம்களில் கால்நடைகளின் பெயர், விலாசம், பால் கறவை விவரம், கால்நடை இனம், கன்று ஈன்ற விவரம் ஆகிய அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு ஹெல்த் கார்டு வழங்கப்படுகிறது.

பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்பதனால் ஒரு குடும்பத்தின் பொருளாதாரம் மேம்படுகிறது. கால்நடைகளுக்கு கோமாரிநோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசி போடவேண்டும். கால்நடைகள் கன்றுகுட்டி போடும் நேரத்தில் தடுப்பூசிகள் போடவேண்டாம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனி இடத்தில் வைத்து பராமரிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குனர்கள் அந்துவன், திருமூலன், ஆவின் பொது மேலாளர் கணேசன், துணைமேலாளர் கோதண்டராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவர்மன், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாணாபாடி கிராமத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாஸ்கர், கால்நடை உதவி மருத்துவர் சந்தோஷ்குமார், டாக்டர்கள் கோபிநாத், லட்சுமணன், மனோகரன், கால்நடை ஆய்வாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com