கோமாரி நோய் தாக்குதல், தடை எதிரொலி: மணப்பாறை மாட்டுச்சந்தை களை இழந்தது

கோமாரி நோய் தாக்குதல் மற்றும் தடை எதிரொலியால் மணப்பாறை மாட்டுச்சந்தை களை இழந்தது.
கோமாரி நோய் தாக்குதல், தடை எதிரொலி: மணப்பாறை மாட்டுச்சந்தை களை இழந்தது
Published on

மணப்பாறை,

கோமாரி நோய் தாக்குதல் காரணமாக மணப்பாறை, சமயபுரம் உள்பட முக்கிய சந்தைகளில் ஆடு, மாடுகள் விற்பனை செய்ய 4 வாரம் தடை விதித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தடை குறித்து மணப்பாறை நகராட்சி அதிகாரிகள், சந்தை குந்தகைதாரர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா?, நடைபெறாதா? என்ற குழப்பமான சூழல் கடந்த 3 நாட்களாக நிலவி வந்தது. மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறும் மாட்டுச்சந்தை வழக்கம்போல நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால், மாடுகள் விற்பனைக்கு தடை மற்றும் கோமாரி நோய் தாக்குதல் எதிரொலியாக சொற்ப எண்ணிக்கையில் தான் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகை நேரங்களில் வியாபாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான மாடு மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால், சந்தை நடைபெறுமா என்ற குழப்பமான சூழ்நிலை நிலவியதால் மணப்பாறை மாட்டுச்சந்தை களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறும் மாட்டுச் சந்தையில் கடந்த 2 நாட்களாக ஆயிரக்கணக்கிலேயே வியாபாரம் நடைபெற்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். சில விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த மாட்டை குறைந்த விலைக்கு விற்றுச் சென்றனர்.

பண்டிகைகள் நெருங்கி வரும் காலகட்டத்தில் மாட்டுச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி வழக்கம்போல் சந்தை செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com