கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராம மக்கள் நேற்று காலை கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். உதவி கலெக்டர் விஜயா அலுவலக பணிக்காக வெளியே சென்று இருந்தார். எனவே உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ரகுபதியிடம், கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றுள் கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த நிலையில் அந்த கோவிலின் அருகில் உள்ள காலி இடத்தையும், அதில் உள்ள கட்டிடத்தையும் சிலர் போலி ஆவணம் தயாரித்து உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோவில் நிலங்களை கண்டறிந்து மீட்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லையெனில், கோவில் நிலங்கள் தனிநபர்களால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படும். எனவே கோவில் நிலத்தை மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த முற்றுகை போராட்டத்தில் இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் சுதாகரன், நகர செயலாளர் வடிவேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com