நெல்லையில் பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

நெல்லையில் பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையில் பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
Published on

நெல்லை,

நெல்லையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள், கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. வீடுகளிலும் கிருஷ்ணர் படங்கள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. கோசாலைகள் சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் மகா சிறப்பு ஆரத்தியும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. கொரோனா ஊரடங்கையொட்டி இங்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எட்டெழுத்து பெருமாள் கோவில்

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையில் பெருமாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். மாலையில் எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகே உள்ள கோசாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்குள்ள கோசாலைகள் சுத்தம் செய்யப்பட்டன. கோபால கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.

கிருஷ்ணருக்கு மண்பானையில் வெண்ணெய், நெய், முறுக்கு, அதிரசம், லட்டு, அல்வா, சீடை உள்ளிட்ட அனைத்து வகையான திண்பண்டங்களும் படைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெண்ணெய் பூசப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பானைகளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. பிரசாதம் படைக்கப்பட்ட பானைகள், கலயங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com