கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வழங்க வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ஏ.செல்லக் குமார் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வழங்க வேண்டும்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரைராஜ் முன்னிலை வகித்தார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், காரிய கமிட்டி உறுப்பினருமான ஏ. செல்லக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் கே.ஆர்.பி. அணை கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல், ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நடத்திட ஜெயலலிதா அனுமதி அளிக்கவில்லை.

ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்க தயங்குகிறார்கள். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது அதிகபட்சமாக 18 சதவீத ஜி.எஸ்.டி. அமல்படுத்த நடவடிக்கை எடுத்த போது, அப்போது குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திரமோடி, கடுமையாக எதிர்த்தார்.

ஆனால் தற்போது 28 சதவீதம் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களும், கிரானைட் தொழிலாளர்கள், ஜவுளித்துறை, சினிமாத்துறை, சிறு தொழில் புரிபவர்கள் என்று அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு உணவுகளுக்கு 5 சதவீத வரியும், கடலை மிட்டாய் உள்ளிட்ட உள்ளூர் தயாரிப்பு உணவுகளுக்கு 28 சதவீத வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

மேலும், சரக்கு, சேவை வரியை கடந்து மாநில அரசும் தேவைப்பட்டால் வரி விதித்து கொள்ளலாம் என்கிற அம்சம் ஜி.எஸ்.டி.யில் உள்ளது. அதனால் தான் சினிமாவிற்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையிலும், உள்ளூர் கேளிக்கை வரி 30 சதவீதம் வரை விதித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன். செல்வதுரை, கிருஷ்ணகிரி நகர தலைவர் ரகமத்துல்லா, மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் சூர்யகணேஷ், மாவட்ட துணை தலைவர் பி.சி.சேகரன், அக.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ரகு, மாவட்ட பொதுச் செயலாளர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com