

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கே.ஆர்.பி.அணை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அணையின் முதல் மதகு உடைந்தது. இதையடுத்து 2018-ம் ஆண்டில் ரூ.3 கோடி மதிப்பில் உடைந்த மதகிற்கு பதிலாக ஒரு புதிய மதகு பொருத்தப்பட்டது. இதே போல அணையின் மற்ற 7 மதகுகளும் பழுதடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து 52 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 42 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அணையின் மற்ற 7 மதகுகளை மாற்ற கடந்த ஆண்டு நவம்பரில் டெண்டர் நடந்தது. இதில் திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.19.7 கோடி மதிப்பில் பணிகளை தொடங்குகிறது. இதையடுத்து திருச்சியில் உள்ள தொழிற்சாலையில் புதிய மதகுகள் தயாரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மதகுகள் வெட்டி எடுக்கும் பணி
ஒவ்வொரு மதகையும் 6 பாகங்களாக தயாரித்து அணைக்கு கொண்டு வந்து பின்னர் அவற்றை பொருத்த உள்ளனர். இதற்காக அணையின் நீர் மட்டம் 31.60 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 158 கன அடி நீர் கால்வாயில் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய 7 மதகுகளையும் வெட்டி எடுக்க கூடிய பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சையத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
20 நாட்களில் அகற்ற திட்டம்
7 மதகுகளை வெல்டிங் வைத்து வெட்டி அகற்றும் பணிகள் தொடங்கியது. 2-வது நாளாக பணிகள் நடந்து வருகிறது. இதில், 13 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரு கிரேன் மற்றும் 2 லாரிகள் பயன்படுத்தப்படுகிறது. மதகை சிறு, சிறு பாகங்களாக தொழிலாளர்கள் வெட்டி எடுத்து கிரேன் மூலம் தூக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது. 20 நாட்களில் 7 மதகுகளையும் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது காலை முதல் மாலை வரை மட்டுமே பணிகள் நடக்கிறது. முதல் கட்டமாக 2 மதகுகளை வெட்டி எடுத்துவிட்டு அங்கு புதிய மதகை பொருத்த உள்ளனர். இப்பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே மற்ற இரண்டு மதகுகளையும் வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெறும். தற்போது புதிய மதகிற்கு தேவையான 11 குறுக்கு கேடர்கள் வந்துள்ளன. மேலும் தேவையான தளவாடங்கள் ஒரு வாரத்தில் கொண்டு வரப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.