கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று, களப்பணியாளர்களை 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் பணிக்கு சேர்ப்பதைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

இதில் சி.ஐ.டி.யு. திட்ட செயலாளர் கருணாநிதி, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க வட்ட செயலாளர் கிரிதரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட செயலாளர் பசவராஜ், தொழிலாளர் பெடரேசன் திட்ட செயலாளர் டேவிட், எல்.பி.எப். லட்சுமணன், திட்ட செயலாளர் ராஜமாணிக்கம், பா.ம.க. தொழிற்சங்க நிர்வாகி ஜெய்சங்கர், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் முரளி, பொருளாளர் மணிவேல் மற்றும் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர் ஆகிய தாலுகாவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அரசு கைவிட வேண்டும்

இந்த போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறும்போது, ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் போது, வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தனியார் மயமாக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மின்வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தம் கேட்டு போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், அவர்களை பணியில் அமர்த்தாமல், அனுபவம் இல்லாத புதிய பணியாளர்களை நியமிக்க அரசு முயற்சிப்பது, கட்டாயம் மின் வாரியத்தை தனியார் மயக்கும் முயற்சியே ஆகும். எனவே தனியார் மூலம் புதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதையும், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com