கிரு‌‌ஷ்ணகிரி, மத்தூரில் சூறைக்காற்றுடன் மழை; மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 5 பேர் காயம்

கிரு‌‌ஷ்ணகிரி, மத்தூரில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். மேலும் நகரமே இருளில் மூழ்கியது.
கிரு‌‌ஷ்ணகிரி, மத்தூரில் சூறைக்காற்றுடன் மழை; மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 5 பேர் காயம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. நேற்றும் காலை வழக்கம் போல வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டமானது. தொடர்ந்து நகரில் பலத்த சூறை காற்று வீசியது.

இதில் பல இடங்களில் கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் பறந்தன. மேலும் கிருஷ்ணகிரியில் பழைய வீட்டு வசதி வாரிய பகுதியில் மிகப் பெரிய தைல மரம் வேரோடு சாய்ந்தது. அது அருகில் இருந்த மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்கம்பம் 2 ஆக உடைந்து விழுந்தது. இந்தநிலையில் சாய்ந்து விழுந்த அந்த மரத்தின் மீது ஏறி இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்து கொண்டனர்.

இதே போல ராயக்கோட்டை சாலையில் புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் 2 மரங்கள் சாய்ந்தன. இதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சிக்கி கொண்டனர். காயம் அடைந்த அவர்களை அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு மீட்டனர். அதே போல அந்த வழியாக மோட்டர்சைக்கிளில் சென்ற ஒருவரின் மீதும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதில் அவர் காயம் அடைந்தார்.

மேலும் டான்சி வளாகத்தில் நகராட்சி பூங்காவில் இருந்த பெரிய மரம், டி.சி. சாலையில் உள்ள மரம் என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கிருஷ்ணகிரி நகரில் மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்ததின் காரணமாக நகரமே இருளில் மூழ்கியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அதைத் தொடர்ந்து சாலைகளில் விழுந்த மரங்கள், மின் கம்பம் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் நகரில் பல இடங்களில் மரங்கள் மின் வயர்கள் மீது விழுந்ததால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரையில் கிருஷ்ணகிரி நகரில் மின்சாரம் இல்லை.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, மழை நின்றுள்ளதால் மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து மின் வயர்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

இதே போல மத்தூர் பகுதியிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு மத்தூர் அருகே உள்ள கோட்டனூரில் கோபுவேடியப்பன் என்பவர் அமைத்திருந்த பசுமைக்குடில் சூறைக்காற்றுக்கு சேதமானது. மேலும் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருடைய தோட்டத்தில் இருந்த 2 தென்னை மரங்கள் சாய்ந்தன.

மலையாண்டஅள்ளியில் மாது என்பவரது வீட்டின் மேற்கூரை சூறைக்காற்றுக்கு சரிந்து விழுந்ததில் அவரது மனைவி ஜெயலட்சுமி, மகள் சத்யா ஆகியோர் காயம் அடைந்தனர். மைலம்பட்டி பகுதியில் ஏராளமான வாழைமரங்கள் சூறைக்காற்றில் சேதமடைந்தன. இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமார் 5 மணி அளவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், இண்டூர், ஏரியூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மரக்கிளைகள் முறிந்து சாலைகள், மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது. மேலும் சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பாருட்கள் புகுந்ததால் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com