கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலை பணிக்கு ரூ.519 கோடி ஒதுக்கீடு அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தகவல்

கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலை பணிக்கு ரூ.519 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலை பணிக்கு ரூ.519 கோடி ஒதுக்கீடு அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தகவல்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார்.கலெக்டர் பிரபாகர், எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு வழி சாலைகள், 6 வழி சாலைகள், விரிவாக்கம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நில எடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல கிருஷ்ணகிரி முதல் திருவண்ணாமலை, திண்டிவனம் சாலை பணி செய்ய ரூ.519 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓசூர் பகுதி வளர்ந்து முன்மாதிரி தொழில் நகரமாக உள்ளது. பெங்களூருவில் இருந்து ஆனேக்கல், கனகபுரா, ராம்நகர், மகடி, ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் 948-ஏ அதிவிரைவு சாலை கர்நாடக மாநிலத்தில் 135 கி.மீட்டரும், தமிழகத்தில் 45 கி.மீட்டரும் என மொத்தம் 180 கி.மீட்டர் பணிகள் நடைபெற உள்ளது.

ஓசூர் முதல் பாகலூர் நான்கு வழி சாலை ரூ.20 கோடியே 30 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளது. ஓசூர் நகர பகுதியில் 6 வழி சாலையில் தலா ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள 5 நடை மேம்பாலம் பணிகளையும், சர்வீஸ் சாலைகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை அகற்றி சர்வீஸ் சாலையை அகலபடுத்த வேண்டும். இந்த சாலை பணிகளை உடனே தொடங்கி பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த சாலை அமைக்கும் பணிக்கு வருவாய்த்துறையினர் மற்றும் நில அளவை துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, பெங்களூரு விரைவு சாலை திட்ட இயக்குனர் பர்வதேசம், விழுப்புரம் சாலை திட்ட இயக்குனர் சிவாஜி, கிருஷ்ணகிரி திட்ட இயக்குனர் நாராயணா, தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் லோகநாதன், உத்தண்டி, உதவி கலெக்டர்கள் சரவணன், விமல்ராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் செந்தில்வேலன், அசோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com