கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை-பரபரப்பு

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை-பரபரப்பு
Published on

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் விஜயாபதி பஞ்சாயத்து சார்பில் சிறப்பு கிராமசபை கூட்டம் கீழவிஜயாபதி கிராமத்தில் நேற்று நடந்தது. பற்றாளராக யூனியன் அலுவலக அலுவலர் வைகுண்டபதி கலந்து கொண்டார். கூட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் பாஸ்கர் ஊராட்சி வரவு-செலவு குறித்தும், பல்வேறு தீர்மானங்களையும் வாசித்தார்.

அப்போது இடிந்தகரையை சேர்ந்த கெபிஸ்டன், சுந்தரி, மெல்பிரட், இனிதா உள்பட பலர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். அதனை வாங்கிக் கொண்ட கிராமசபை கூட்ட பற்றாளர் வைகுண்டபதி, இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்கப்படும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆனால், பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில், கிராமசபை கூட்டம் மக்களுக்கான கூட்டம். இந்த கூட்டத்தில் மக்கள் கொண்டு வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை.

இதையடுத்து வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினார். பின்னர் பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மான புத்தகத்தில் கையெழுத்து போடாமல் கலைந்து சென்றனர். இதனால் எந்தவித தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் கலைந்தது. கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேபோன்று கூடங்குளம், செட்டிகுளம், வடக்கன்குளம் மற்றும் ஆனைகுளம் ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களிலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமையவுள்ள அணுக்கழிவு மையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். முதலில் தீர்மானம் வைக்க முடியாது என்று சொன்ன அதிகாரிகள், பொதுமக்களின் வலியுறுத்தலால் நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com