

குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டை ஊராட்சி கரும்புளிபட்டி, சாலம்பட்டி ஆகிய 2 கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கரும்புளிபட்டி, சாலம்பட்டி கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முத்துக்குமரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டதால் குடிநீர் வினியோகம் செய்ய பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றன.
சின்னாளபட்டி பேரூராட்சி பகுதிக்கு ஆத்தூர் அணை, பேரணை ஆகியவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2 அணைகளும் வறண்டதால் 17 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. அதுவும் கலங்கலாக வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று 15-வது வார்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் செயல் அலுவலர் கலையரசியிடம் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.